பிரபல சினிமா பிரமுகரை இடைத்தேர்தலில் நிறுத்த போகிறதா அதிமுக?

மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஆளும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் நேற்று விருப்ப மனுக்களை பெற்றனர். பின்னர் அதனை பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர்.

நேற்று மாலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை நடத்தினர். அப்போது பிரபல சினிமா பைனான்சியரான அன்புச் செழியனும் நேர்காணலில் பங்கேற்றார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கான நேர்காணலில் அவர் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து அதிமுகவின் வேட்பாளராக மதுரை அன்பு திருப்பரங்குன்றத்தில் நிறுத்தப் படுவார் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மதுரையை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அன்புச் செழியன் மிகவும் நெருக்கமானவர் ஆவார். மேலும் செலவுக்கு குறை வைக்காதவர். இதனால் அவர் அதிமுக சார்பில் நிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது. இதனிடையே அன்புச் செழியன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம்… திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றி நீதிமன்றம் வரை சென்றது தான்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து மற்ற 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கும் மக்கள் வாக்களித்தனர்.

இதேபோல், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

ஏற்கனவே, திமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் எம் சி சண்முகையா, திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.