கோவை சரளா வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் காட்ட ரெடியாகும் கமல்

சினிமாவை தாண்டி வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா நேற்று திடீரென்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பல பேரோட புருவங்களை உயர்த்தினார்.

இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் வட்டாரங்கள், ‘பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைய உள்ளனர். கோவை சரளா ஆரம்பம் தான். போகப் போக பாருங்க எங்க ஆண்டவரோட‌ ஆட்டத்தை’னு பெருமாயா சொல்றாங்க.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில், தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தணித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சினிமா பிரபலங்களை இக்கட்சியில் இணைக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் கமல் ஹாசன். அந்த வகையில் இவருடன் இணைந்து நடித்த கோவை சரளாவும் நேற்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருக்கிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சியில், கமல் ஹாசன் முன்னிலையில் கோவை சரளா இக்கட்சியில் இணைந்தார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அப்போது பேசிய சரளா, “முதலில் எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் இங்கு வந்தேன். இங்கு போறபோக்கைப் பார்த்தால் `மக்கள் நீதி மய்யம்’ கட்சி மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும் போல. அந்த அளவுக்குப் பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

மகளிருக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்கின்ற நம்பிக்கையுடன் நான் கட்சியில் இணைகிறேன். மக்கள் என்னைச் சினிமாவில் வாழ வைத்தார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். தமிழகத்தில் நிறைய கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே `மக்கள் நீதி மய்யம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் கமல் சார் நிறைய சாதனைகள் செய்துள்ளதுடன், எனக்கு உறுதுணையாகவும் இருந்தார்.

இப்போது அவருக்குச் சேவை செய்யவே கட்சியில் இணைந்துள்ளேன். சினிமாவில் நடிப்பவர்களுக்குத்தான் மக்களின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்ள முடியும். தமிழக மக்களின் மனநிலை எங்களுக்கு நன்றாகவே தெரியும். பெண்கள் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும். ஆண் – பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், நாடு நலம்பெறும்,” என கூறினர்.