ஆன்மிக ஆர்வம்: அனைத்துக்கும் நோ சொல்லும் நடிகை

பார்ட்டி, கெட்‍ டுகெதெர், ஃப்ரெண்ட்சுடன் ஜாலி என்று ஒரு இளம் நடிகை இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், எப்போதும் ஆன்மிக சிந்தனையிலேயே இருந்தால்..? அப்படித் தான் இருக்கிறாராம் நிவேதா பெத்துராஜ்.

நிவேதாவுக்கு தற்போது ஆன்மிகத்தில் அதிக‌ நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார். அடிக்கடி கோயில் குளம் என்று சுற்றும் நிவேதா, பார்ட்டிகளுக்கும் நோ சொல்லி விடுகிறாராம்.

அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் என்று தமிழ் படங்களில் நடித்த நிவேதா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

தனது இந்த வளர்ச்சிக்கு, கடவுளின் கருணை தான் காரணம் என்று பலமாக நம்பும் இவர், எப்போது நேரம் கிடைத்தாலும், அப்போதெல்லாம் அருகிலிருக்கும் கோயிலுக்கு செல்லத் தவறுவது இல்லையாம்.

நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமில்லாமல், ஆன்மிக உணர்வும் தான் காரணம் என்று நினைக்கிறாராம்.

இதற்கிடையே, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்‌‌ஷன் திரில்லர் கதையாக உருவாக இருக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

ஆக்‌‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.