முன்னாள் காதலி பற்றி பேசி சிக்கலில் சிக்கிய நடிகர்

விவேக் ஓபராய் ஐஸ்வர்யா ராய் குறித்து பதிவிட்ட ட்விட், பலத்த சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் அவர் அளித்துள்ளார். இதற்கு பின்னணியில் ஐஸ்வர்யா ராயை அவர் பழி வாங்கும் நோக்கமே இருந்தது என பலரும் வசைபாடி வருகின்றனர்.

ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், 42. தமிழில், விவேகம் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், 24ம் தேதி வெளியாக உள்ள, ‘பி.எம்., நரேந்திர மோடி’ என்ற படத்தில், பிரதமர் மோடியாக, விவேக் ஓபராய்நடித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இதில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் ஓபராய், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை ஐஸ்வர்யா ராயுடன் இணைத்து ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ஒபீனியன் போல் (Opinion Poll) என்று கூறி, சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற படமும், பின், எக்ஸிட் போல் (Exit poll) என்று கூறித் தன்னுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பது போலவும், பிறகு, ரிஸல்ட் (Result) என்று கூறி, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையாகிய‌து. விவேக் ஓபராயின் ட்வீட்டுக்கு பல பெண்கள் அமைப்புகளும், பாலிவுட் பிரபலங்களும் கடும் கண்டம் தெரிவித்த‌னர். இப்படியான ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும் கூறினர்.

எதிர்ப்பு தீவிரமானதை தொடர்ந்து விவேக் ஓபராய் நேற்று மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு விஷயம் முதலில் வேடிக்கையாக தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தெரியாது.

10 வருடங்களாக சமூகத்தில் பின்தங்கிய 2,000 குழந்தைகளுக்கு உதவிகள் செய்துள்ளேன். எந்த பெண்ணையும் எப்போதுமே நான் இழிவாக நினைத்தது இல்லை. நான் பதிவிட்ட மீம்ஸ் காரணமாக ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அந்த பதிவை நீக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் என்மீது புகார் அளித்துள்ளனர். அவர்களின் புகார் கடிதத்துக்காக நான் காத்திருக்கிறேன். மேலும், அந்தப் பெண்களை நேரில் சந்தித்து, நான் செய்தது தவறு இல்லை என அவர்களுக்கு விளக்கமளிக்கவும் தயாராக உள்ளேன்.

மக்கள் இதை ஏன் இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த மீமை எனக்கு அனுப்பினார். நான் அதைப் பார்த்து சிரித்துவிட்டு, இதை உருவாக்கியவரைப் பாராட்டினேன். யாரேனும் உங்களை ஏளனம் செய்தால், நீங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.