பெண்ணிடம் ஆபாச பேச்சு, ஆடியோ பதிவுடன் சிக்கிய நடிகர்

திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இவர், தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கேரளாவைச் சேர்ந்த மாடல் ஒருவர், வயநாடு மாவட்டம் பாம்பாடி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், “கடந்த ஏப்ரல் 18ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வயநாடு மாவட்டம் கல்பற்றா சென்றிருந்தேன்.

அப்போது நடிகர் வினாயகன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கூறி போனில் அழைத்தார். அப்போது அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவம் நடந்த இடம் கல்பற்றா என்பதால் அங்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கல்பற்றா போலீசார் நடிகர் வினாயகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது பற்றி, தன், ‘பேஸ்புக்’ பக்கத்திலும் அந்த மாடல் பதிவிட்டுள்ளார். போன் பேச்சு பதிவையும், போலீசில் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கடந்த, 2016ல் வெளியான, கம்மட்டி பாடம் என்ற மலையாள படத்துக்காக, கேரள அரசின், சிறந்த நடிகர் விருது பெற்றவர் வினாயகன். தமிழில், மரியான், சிலம்பாட்டம், திமிரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1995ம் ஆண்டு மாந்திரிகம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த தொட்டப்பன் என்ற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வினாயகனை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் அவர் விரைவில் கைதாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.