சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத்தளிர்கள்

கல்வி, இலக்கியம், விவசாயம், மருத்துவ அறிவியல், வணிகம், விளையாட்டு, இயற்கை சாகசம், வானொலி, திரைத்துறை, என ஒவ்வொரு துறையிலும் உலகளவில் சாதனைகளைப் படைக்கும் சாதனையாளர்களை பட்டியலிடும் கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகத்திற்கு இணையான புகழைப் பெற்ற வொண்டர் சாதனையாளர்கள் புத்தகத்தில் காரைக்காலிலுள்ள குட்ஷெப்பர்ட்  மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி இடம்பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இவர்கள் இளம் வயதிலேயே கராத்தே என்ற தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட்டை பெற்றவர்கள் என்பது தான் இவர்கள் நிகழ்த்திய சாதனையாகும்.
இந்த சாதனையை நிகழ்த்தியது குறித்து இரட்டையர்களில் ஒருவரான ஸ்ரீவிசாகன் பேசுகையில்,“நானும், என் தங்கை ஸ்ரீ ஹரிணியும் இரட்டையர்கள். மூன்று வயதிலிருந்தே தற்காப்பு கலையை ஆர்வமாக பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் ஒன்பது வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு ‘பிளாக் பெல்ட்’ டை வென்ற இரட்டையர்கள் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறோம். பெற்றோரின் அரவணைப்பும், காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர்  மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும் தற்காப்பு கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது.” என்றார்.  
அண்ணனைத் தொடர்ந்து தங்கை ஸ்ரீ ஹரிணி பேசுகையில்,“தற்காப்பு பயிற்சியும், தற்காப்பு போட்டிகளும் தான் எங்களை உற்சாகமாக இயங்க செய்கிறது. நினைவு தெரிந்த வயதில் இருந்தே தற்காப்பு கலை எங்களோடு வளர்ந்து வருகிறது. கராத்தே என்ற கலையுடன் நாங்கள் குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்… என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை பயின்றிருக்கிறோம்.” என்றார்.
சாதனையாளர்களுக்கான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த இரட்டை சாதனையாளர்களின் அனுபவத்தையும், சாகசத்தையும் பாராட்டும் முன், இவர்களுக்கு பின்னணியில் தன்னலம் கருதாமல் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.
வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் இந்த சாதனை இரட்டையர்கள், தாங்கள் கற்ற தற்காப்பு கலையை பயிற்சி வீடியோவாக்கி, ‘ www.karatetwins.com ’ என்ற யூட்யூப் தளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவர்களின் தளத்தை பார்வையிடுபவர்கள், இவர்களின் பயிற்சியை தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பதுடன், இந்த தளத்திலுள்ள பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பரிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புல்..போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளின் வீடியோக்களையும் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். மறவாமல் இவர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் மனதார பாராட்டுகிறார்கள். இந்த கொரோனா காலக்கட்டத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் பார்வையிடும் தளமாக இந்த தளம் இருக்கிறது.
இதனிடையே இந்த வொண்டர் சாதனையாளர் புத்தகத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான இந்திய சாதனையாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pro.Siva