81 நிமிடங்களில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்த 3.6.9. இசை வெளியீட்டு விழா
“நல்ல விஷயத்துக்காக பிடிவாதமா இருப்பேன்” ; 3.6.9 இசை விழாவில் பாக்யராஜ் ஓபன் டாக்
விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி ; 3.6.9 இயக்குனர் சிவ மாதவ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9. இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் இயக்குனர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் ; இயக்குனர் சுப்ரமணிய சிவா
“புரியவில்லை.. ஆனால் ஏதோ இருக்கிறது” ; இசையமைப்பாளர் தீனாவின் ஆர்வத்தை தூண்டிய 3.6.9 ட்ரெய்லர்
பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்தில். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது. .
இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, லோக்கல் சரக்கு படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ் , நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
இயக்குனர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது, :இன்றைய இயக்குனர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார் தான். அவர்தான் தனது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குனர் கையாள வேண்டும் என்பதை முதன் முதலில் கொண்டு வந்தவர். அவருக்கு பின்வரும் இயக்குனர்கள் கதையுடன் வரவேண்டும் என்கிற நெருக்கடியையும் அவர் உருவாக்கினார். அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது” என்று கூறினார்.
இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் பேசும்போது, “இந்த படத்தின் தலைப்பு 3.6.9 என்பது என்னால் மறக்க முடியாத ஒரு நம்பர்.. காரணம் நான் முதன்முதலில் வாங்கிய காரின் நம்பரும் அதுதான்.. இளமையான ஒரு கூட்டணியில் இணைந்து பாக்கியராஜ் சார் பணியாற்றியுள்ளார். இந்த மேடையில் அவர் வரும்போது படக்குழுவினர் அனைவருமே அவரை ஒரு பயம் கலந்த மரியாதையுடன் வரவேற்றனர். சாதித்த இயக்குனர்களுக்கு இன்று கொடுக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் இது தான். ஏனென்றால் இன்றைய இளைய தலைமுறைக்கு சாதித்த சீனியர்கள் பற்றி தெரிவதில்லை. தொடர்ந்து வெள்ளிவிழா படங்களாக கொடுத்தவர் அவர். வெள்ளிவிழா படம் கொடுப்பது என்பது சாதாரண விஷயம் போல இன்று இருப்பவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவருடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா படங்கள் தான்.. எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில், கதை சரியாக யோசிக்க முடியாத நேரங்களில், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் இயக்குனர் பாக்கியராஜின் மாணவன் என்பதை நினைத்துக் கொள்வேன். உடனே உற்சாகம் வந்துவிடும்” என்று கூறினார்
இசையமைப்பாளர் தீனா பேசும்போது, “சில படங்களில் ட்ரெய்லரை பார்த்தால் நமக்கு ஒன்றுமே புரியாது. இந்த படத்தின் ட்ரெய்லரும் அதுபோலத்தான் இருந்தது. ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக இந்த ட்ரெய்லர் இருப்பதை மறுக்க முடியாது. இந்த படத்தின் பின்னணி இசையை பார்க்கும்போது ஜுராசிக் பார்க் படத்திற்கு கையாண்ட முறையை போல இதிலும் செய்திருப்பார்கள் என்று நினைக்க வைக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முதலில் நான் வருவதாக இல்லை.. காரணம் படத்தின் இசையமைப்பாளர் எங்களது சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால் இன்று மாலை தான் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். அடுத்த நிமிடமே இந்த விழாவுக்கு கிளம்பி வந்துவிட்டேன். அவர் மிகப்பெரிய அளவில் வருவார்” என்று பாராட்டினார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசும்போது, “நான் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றுதான் ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டு அதை நோக்கி வந்தேன். ஆனால் சில நேரங்களில் அதை விட்டு பாதை மாறும் விதமாக நான் செல்லும்போது தயாரிப்பாளர் பிஜிஎஸ் தான் என்னை இழுத்து பிடித்து இதுதான் உனக்கு சரியான பாதை என்று என்னை வழிநடத்தினார். என்னை நம்பி இந்த படத்திற்கு நீதான் இசையமைக்கிறார் என்று மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தார். அதுமட்டுமல்ல இது போன்ற ஒரு சாதனை படத்திற்கு மிகுந்த அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களை தான் பெரும்பாலும் தேடுவார்கள். ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இயக்குனர் சிவ மாதவ்வும் ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
நடிகர் பிளாக் பாண்டி பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்னதாக ரிகர்சல் செய்து கொண்டிருந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் மழை பெய்து கொண்டிருந்தது. நாம் நினைத்தபடி படப்பிடிப்பு நடத்த முடியுமா என எனக்கு சந்தேகம் வந்தது. அதனால் இயக்குனர் நம்பிக்கையுடன் இருந்தார். அதேபோல சாதனைப்படமாக இது எடுக்கப்பட இருப்பதால் எந்த ஒரு இடத்திலும் நம்மால் அதற்கு இடையூறு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். வசனத்தை மறந்து விட்டால் கூட அதனால் சாதனை தடைப்பட்டு விடும் என்று கூட இயக்குனர் கூறியிருந்தார். அதனால் இந்த படம் குறித்த நினைப்பை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறினார்.
படத்தின் இயக்குனர் சிவ மாதவ் பேசும்போது, “கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப்படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இதை துவங்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர்கள் வரை வந்து சென்றனர். அதில் பலபேர் இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு சாதனையை செய்து விட்டோம் அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கை தான் பார்த்துக்கொண்டி இருப்பார்கள்.
இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம் என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில் கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றி தான் இந்தப் படம் பேசுகிறது” என்று கூறினார்.
படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் பேசும்போது, “முதல் படம் எனக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை. அதன் பிறகுதான் ஒரு பெரிய படமாக, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.. அந்த படம் அனைவரையும் பேச வைக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த போது தான் இப்படி ஒரு சாதனை படத்தை எடுக்கும் எண்ணம் உருவானது. இயக்குனர் சிவ மாதவ்விடம் இதை சொன்னபோது சற்றும் தயங்காமல் ஒப்புக்கொண்டார். அதேசமயம் படம் ஆரம்பிக்கும் முன்பு அவர் என்னிடம் சொன்ன கதை படமாக எடுக்க துவங்கியபோது கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருந்தது. ஆனால் அதுவும் முதலில் சொன்னதைவிட நன்றாகவே இருந்தது. 81 நிமிடங்களில் எடுக்கும் படம் தானே, குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே காலியானது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது. இந்த படத்தில் ரிகர்சளுக்காக கிட்டத்தட்ட மூன்று நாட்கள் பாக்கியராஜ் சார் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். இதற்காக அவர் பணம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த கப்பலின் கேப்டன் சிவமாதவ் தான் என்றாலும் இது பாக்கியராஜ் சார் படம் தான் என்பதை உறுதியாக சொல்வேன்” இந்த கூறினார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான்.. நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன். நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு.. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.. அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன்.
இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.
அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை.
அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி படப்பிடிப்பின் போதும் எனக்கு பல விஷயங்கள் புரியாமலேயே அந்த சமயத்தில் அங்கே தான் கற்றுக் கொண்டு அந்த படத்தை முடித்தேன். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ்வும் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று கூறினார்.