ஒரு தூய்மைப் புரட்சி: தூய்மை இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மையின் மறுவடிவமைப்பு

சமூக நீதி, நகரமயமாக்கல், பொது சுகாதாரம் மற்றும் கல்வி என அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாடு அரசு முற்போக்கான மற்றும் தொலைநோக்குடைய நிர்வாகத்தை வழங்கி வருகிறது. இதன் வெளிப்பாடாக, இந்திய அரசியலமைப்பின் அட்டவனை 11 மற்றும் 12-ன் படி, உள்ளாட்சி அமைப்புகளின் கடமைகளில் ஒன்றான துப்புரவுப் பணியை, மாநில வளர்ச்சியின் முக்கியத் தூணாக மாற்ற ‘தூய்மை இயக்கம்’ (Thooimai Mission) உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்குப் பார்வை: ஒரு மாபெரும் மாற்றம்

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ‘தூய்மை இயக்கம்’ அமைக்கப்படும் என்று அறிவித்தது இந்த மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாகும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மை “நேரியல் கழிவு அப்புறப்படுத்துதல்” (linear waste disposal) முறையிலிருந்து, நவீன ‘வளங்களை மீண்டும் பயன்படுத்தும் மேலாண்மை’ (circular resource management) முறைக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை ‘தூய்மை இயக்கம்’ மேற்கொள்ளும்.

இந்தத் தொலைநோக்குப் பார்வை, ஜூன் 5, 2025 அன்று செயல் வடிவம் பெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி மேற்பார்வையில், 1,100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற பிரம்மாண்டமான குப்பை சேகரிப்பு மூலம் இவ்வியக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இது வெறும் துப்புரவுத் திட்டம் அல்ல; பொது சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் ஒரு பன்முக உத்தி. “உருவாகும் குப்பைகள், குப்பைக் கிடங்குகளுக்கு செல்லாத நிலையை“ (Zero Waste to Landfill) உறுதிசெய்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வளமாக மாற்றும் முறைக்கு மாறுவதே இத்திட்டத்தின் லட்சியமாகும்.

தூய்மை இயக்கத்தின் இதயம்: தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (Clean Tamil Nadu Company Limited)
இந்த மாற்றத்தின் மையமாகச் செயல்படுவது ‘தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) ஆகும். இது வெறும் மேற்பார்வை செய்யும் அமைப்பல்ல; தூய்மை இயக்கத்தின் நோக்கங்களை செயல்படுத்தும் நிறுவனமாகும். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் குப்பை மேலாண்மைத் திட்டங்களைக் கண்காணிப்பது, தரப்படுத்துவது மற்றும் முறைப்படுத்துவது இதன் பணியாகும். குப்பைகளைப் பிரிப்பது முதல், அவற்றைச் சரியான முறையில் மறுசுழற்சிக்கு அனுப்புவது வரை அனைத்தையும் உறுதி செய்ய இந்நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்படுத்துபவர்கள்: உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு:
மாநகராட்சிகள் முதல் கிராம ஊராட்சிகள் வரையிலான உள்ளாட்சி அமைப்புகளே இத்திட்டத்தின் மிக முக்கியப் பங்களிப்பாளர்கள். தூய்மை தமிழ்நாடு நிறுவனம், திட்டத்தை வடிவமைக்கும் “மூளை” என்றால், உள்ளாட்சி அமைப்புகள் அதைச் செயல்படுத்தும் “கைகள்”. தினமும் காலை 7 மணிக்கு மின்கல வாகனங்கள் வீடு தேடி வருவதற்கு இவர்களே காரணம். தூய்மை மிஷனின் கீழ், இந்த அமைப்புகள் வெறும் நிர்வாக அலகுகளாக இல்லாமல், வளங்களை மீண்டும் பயன்படுத்தி பொருளாதாரத்தின் பாதுகாவலர்களாக மாற்றப்படுகின்றன. பொது வெளியில் குப்பை கொட்டும் இடங்களே இல்லாத (Garbage Vulnerable Points Free) நிலையை அடைவதற்கு உள்ளாட்சி அமைப்புகளை பொறுப்பாக்குவதன் மூலம், தூய்மைப் பணி அங்கு உறுதி செய்யப்படுகிறது.

குப்பையிலிருந்து வளம்: பொருளாதார வெற்றி
சுழற்சிப் பொருளாதாரத்தின் மூலம் லாபம் ஈட்ட முடியுமா என்ற சந்தேகங்களுக்கு தூய்மை தமிழ்நாடு நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜூன் முதல் டிசம்பர் 2025 வரை நடைபெற்ற நான்கு கட்ட சேகரிப்பு இயக்கங்கள் மூலம், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லவிருந்த 2,877 டன் கழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, அதன் மூலம் சுமார் ₹3.79 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டு, 38 புதிய அங்கன்வாடி மையங்களைக் கட்டலாம், அல்லது அரசுப் பள்ளிகளில் 190 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கலாம், அல்லது 11 நவீன உயிர் காக்கும் அவசரஊர்திகள் வாங்கலாம். நாம் குப்பையைப் பிரித்துக் கொடுக்கும்போது, வீடு மற்றும் தெருக்கள் மட்டும் சுத்தம் ஆவதில்லை; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நிதியளிக்கிறோம் என்பது இது நிரூபனமாகிறது.

குப்பைத் திருவிழா (ஜனவரி 12 – 23, 2026): ஒரு மக்கள் இயக்கம்
ஜனவரி 12 முதல் 23 வரை நடைபெறவுள்ள ‘குப்பைத் திருவிழா’ எனும் மாபெரும் குப்பை சேகரிப்பு இயக்கம், தூய்மைப் பணியை நிர்வாக அமைப்பிலிருந்து ஒரு சமூக இயக்கமாக மாற்றுகிறது. போகிப் பண்டிகையை ஒட்டித் திட்டமிடப்பட்டுள்ள குப்பைத் திருவிழா, குப்பைகளைக் கொட்டும் பழக்கத்தை மாற்றி, பொறுப்புடன் ஒப்படைக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான ஒரு மாநில அளவிலான திருவிழாவாகும்9.
குப்பை கொட்டும் இடங்களை (GVPs) கண்டறிந்து சுத்தம் செய்வதில் தொடங்கும் இவ்வியக்கம், ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகளைச் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்கும் நிகழ்வோடு உச்சக்கட்டத்தை அடைகிறது.

நான்கு முக்கியத் தூண்கள்:
1. மனநிலை மற்றும் பழக்கங்களில் மாற்றம்: விழிப்புணர்வைத் தாண்டி, தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே வழங்கும் பழக்கத்தை மக்களிடம் உருவாக்குதல்.
2. குப்பை கொட்டும் இடங்களை (GVPs) மீட்டெடுத்தல்: குப்பைகள் கொட்டப்படும் இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சுத்தம் செய்து, பூங்காக்களாகவோ, சுவர் ஓவியங்கள் கொண்ட இடங்களாகவோ மாற்றி, மீண்டும் குப்பை கொட்டப்படுவதைத் தடுத்தல். இதை கண்காணிக்க “தூய்மை TN” செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
3. வள மீட்பு மையங்கள்: ஒவ்வொரு வார்டிலும் (நகர்ப்புறம்) மற்றும் ஊராட்சிகளிலும் சேகரிப்பு மையங்களை அமைத்து, CTCL நிர்ணயித்த விலைப் பட்டியலின்படி கழிவுகள் வளமாக மாற்றப்பட்டு, அந்த குப்பைகளின் மூலம் பொருளாதாரப் பலன் கிடைப்பதை உறுதி செய்தல்.
4. மகளிர் சக்தி: 52 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுப் பெண்களை (மகளிர் தூய்மை இயக்கம்), இம்மாற்றத்தின் தூதுவர்களாகச் அடையாளப்படுத்தி, அவர்களின் மூலம் இவ்வியக்கத்தின் வெற்றியை சாத்தியப்படுத்துதல்.
ஒரு விழிப்புணர்வு அழைப்பு

“குப்பைக் கிடங்குகளே இல்லாத தமிழகம்” என்பதே நமது லட்சியம். இதற்காக 2026-ம் ஆண்டிற்கான கழிவு சேகரிப்பு நாட்காட்டி (Waste Collection Calendar) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குப்பைத் திருவிழா என்பது ஒரு நாள் நிகழ்வு அல்ல; அது தினசரி பழக்கமாக மாற வேண்டும். ஒவ்வொரு வீடும், கடையும், அலுவலகமும், தூய்மை உறுதிமொழியை ஏற்று, தங்கள் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும் என்று அழைக்கிறோம். தூய்மை என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் கடமை. வாருங்கள், தூய்மையான வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.

Exit mobile version