பெறுநர்,
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம்,
சென்னை.
கடித எண்.701/ தெ.ந.ச / 2025 நாள்: 15.11.2025
பொருள் : பழம்பெரும் நடிகை பத்மஸ்ரீ திருமதி.மனோரமா
அவர்கள் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை
சூட்டிடக் கோரிக்கை – தொடர்பாக.
———
பேரன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மிகப் பணிவான வணக்கம்.
தங்கள் மேதகு தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்த் திரைக் கலைஞர்களுக்கு வழங்கும் அன்பும் மரியாதையும் அவர்கள் உழைப்பிற்கும், திறமைக்கும் அழியாப் பெருமையும், புகழும் சேர்த்து வருகிறது. அவ்வகையில், மறைந்த திரு.ஜெயசங்கர் அவர்கள், திரு. விவேக் அவர்கள், திரு. எஸ்.வி. வெங்கடராமன் அவர்கள் போன்ற சிறந்த கலைஞர்களின் பெயர்களை கொண்டு சென்னையின் தெருக்களுக்கு தாங்கள் பெருந்தன்மையுடன் பெயர் சூட்டி அலங்கரித்ததை பெரு நன்றியோடு நினைவு கூறுகிறோம்.
மேலும், நுங்கம்பாக்கம், காம்தார் நகர் பிரதான சாலைக்கு மத்திய மாநில அரசு விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை பெற்ற மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பெயரை சூட்டியதும், சென்னையின் மையத்தில் அமைந்த ஒரு போக்குவரத்து தீவுக்கு இயக்குநர் சிகரம். பத்மஸ்ரீ. திரு. கே.பாலச்சந்தர் அவர்கள் பெயரை சூட்டியதும், கலைஞர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட உலகின் பொக்கிஷமாக கருதப்படும், மறைந்த பத்மஸ்ரீ, கலைமாமணி திருமதி. மனோரமா அவர்கள் வாழ்ந்த தியாகராயர் நகரை சேர்ந்த நீலகண்ட மேத்தா தெருவிற்கு, அவருடைய பெயரைச் சூட்டி கவுரவிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்களிடம் ஒரு பணிவான கோரிக்கையை சம்ர்ப்பிக்கிறோம்.
1958-ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் அறிமுகமாகி 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்து தேசிய விருது பெற்றதுடன், உலகிலேயே 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெண் நடிகர் என்ற கின்னஸ் உலக சாதனையும் படைத்து, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத அடையாளமாக விளங்குபவர் திருமதி. மனோரமா அவர்கள்.
சாதனை சின்னமான ஒரு நடிகரின் பெயரை அவர் வாழ்ந்த தெருவுக்கு சூட்டுவது தொடர்பான தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பான இந்த முதல் கோரிக்கையை அன்பு கூர்ந்து தாங்கள் பரிசீலிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
எங்கள் கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து, பத்மஸ்ரீ திருமதி.மனோரமா அவர்கள் வாழ்ந்த தியாகராயர் நகரை சேர்ந்த நீலகண்ட மேத்தா தெருவிற்கு “மனோரமா தெரு” என்ற பெயரைச் சூட்டிட வேண்டி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,
(M.நாசர்)
தலைவர்
**********************************
பெறுநர்,
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமை செயலகம்,
சென்னை.
கடித எண். 702/ தெ.ந.ச / 2025 நாள்: 14.11.2025
பொருள் : மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக
நிறுவப்பட்டுள்ள நாடகத் தந்தை தவத்திரு
சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது திருவுருவச்
சிலையை இடமாற்றம் செய்வது – தொடர்பாக.
———
பேரன்பிற்கும், பெரு மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு மிகப் பணிவான வணக்கம்.
மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக நிறுவப்பட்டுள்ள நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது திருவுருவச் சிலையை, அங்கு நடந்து வரும் மேம்பாலப் பணிகளால் இடமாற்றம் செய்ய மதுரை நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அனேக கலை உலக வித்தகர்களின் வாழ்வுக்கும், புகழுக்கும் அஸ்திவாரமாக விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களது திருவுருவச் சிலையை தமுக்கம் மைதானப் பகுதியிலிருந்து அகற்றாமல், தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு அருகிலோ, தமுக்கம் மைதானத்தின் உள்ளே வேறு ஒரு பொருத்தமான இடத்திலோ அமைத்துத் தர அனுமதி தந்து அவர்தம் புகழுக்கு பெருமை சேர்க்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்கள் கருணைமிகு பரிசீலனைக்கு சமர்ப்பிக்கிறோம்.
தொடர்ந்து தாங்களும், தங்கள் அரசும் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், உதவிகளுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்,
(M.நாசர்)
தலைவர்
++++++++++++++