ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்ததற்கு இது தான் காரணமா?

தனது காதலரை பிரிந்துவிட்டார், கமல் ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான‌ ஸ்ருதி ஹாசன். இதுகுறித்து அவரும், அவரது காதலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.

ஸ்ருதி ஹாசன் கடந்த சில‌ வருடங்களாக‌ லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சால் என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இவருடைய காதலுக்கு தந்தை கமல் ஹாசன் மற்றும் தாய் சரிகா ஆகியோர் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மைக்கேல் கோர்சால் தனது டிவிட்டரில், “வாழ்க்கை நம்மிருவரையும் உலகின் எதிரெதிர் துருவத்தில் வைத்துள்ளது. எனவே, நாமிருவரும் துரதிர்ஷ்டவசமாக அவரவர் பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும், அவர் என் சிறந்த தோழி. அவரை என் தோழியாக அடைந்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசனும், தனது சமூக வலைதளப் பக்கத்தில், “என் வாழ்க்கையில் இன்னொரு புதிய கட்டத்தை தொடங்குகிறேன். எல்லா காதல் பாடங்களுக்காகவும் நன்றி.

இருண்ட இடத்தின் ஆழத்தில்தான் ஒளி பிரகாசிக்கும். இசை, மேலும் படங்கள் என்று காத்திருக்கிறேன். என்னுடனேயே நான் இருப்பது, எப்போதுமே எனது பெரிய காதல் கதையாக இருந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் பிரிந்தது குறித்து பல யூகங்கள் உலா வரும் நிலையில், திருமணத்திற்காக ஸ்ருதியை மதம் மாற சொல்லிக் கேட்டதாகவும், இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ள ஸ்ருதி, அதற்கு மறுப்பு தெரிவித்ததால் காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

காதல் முறிவை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அது மட்டுமில்லாமல், பாலிவுட்டிலும் பிசியாக தொடங்கியுள்ளார்.

முதன் முறையாக ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார்.

அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். சிங்கம்-3 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்ட ஸ்ருதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.