ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?

திமுக தலைவர் மு க ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் மூன்றாவது அணிக்கு திமுகவை இழுப்பது தான் என சொல்லப்பட்டாலும், ராவ் பாஜகவின் மறைமுக தூதர் என்றே பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நேற்று மாலை 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை ஸ்டாலினும், திமுகவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி ஆர் பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பிற்குப் பிறகு சந்திரசேகரராவோ, ஸ்டாலினோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதற்குப் பிறகு திமுக வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியில் மாநில கட்சிகளின் பங்கு என்னவாக இருக்கும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, மத்தியில் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், மாநில கட்சி தலைவர்களில் ஒருவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்றும், அதற்கு திமுக ஆதரவு அளிப்பதோடு மந்திரி சபையிலும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

அதற்கு ஸ்டாலின், மத்தியில் காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்பதால், மாநில கட்சிகள் அனைத்தும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே சிறந்ததாக இருக்கும் என்றும், எனவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக திமுக தரப்பில் சொல்ல‌ப்படுகிறது.

ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதால், மே 23க்கு பிறகே எதையும் கூற முடியும்.