விஷாலுக்கு எதிராக வியூகம்: பரபரப்பில் நடிகர் சங்கம்

விரைவில் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தல், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை விட பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளரும் கல்வியாளருமான‌ ஐசரி கணேஷ் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது.

தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் பல்வேறு சமயங்களில் விஷால் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவரும் விஷாலுக்கு எதிராக களமிறங்குவார் என்று வதந்திகள் பரவியது.

ஆனால் அதனை மறுத்துள்ள சுரேஷ், தான் போட்டியிடப் போவதில்லை எனவும் தெரிவித்தார். எனினும் விஷாலுக்கு எதிராக தங்கள் அணியின் சார்பில் ஐசரி கணேஷ் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். மேலும் ஐசரிகணேஷின் அணியை வலுசேர்க்க அதில் பிரபல நடிகர்களை இழுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

முதல்கட்டமாக ஐசரிகணேஷ் அணியில் நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ளதாகவும், அவர் நடிகர் கார்த்தியை எதிர்த்து பொருளாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் நடிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஷால் மற்றும் நாசருக்கு எதிராகவும் பிரபல நடிகர்களை களமிறக்க ஐசரி கணேஷ் அணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் சங்கத்தின் தற்போதைய அலுவலர்களின் பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில், அதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற உள்ளது.

நடிகர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கங்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணிக்கு எதிராக கடந்த தேர்தலில் களமிறங்கிய சரத்குமார் அணியில் சரத்குமார், ராதாரவி இருவருமே சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர்கள் போட்டியிட முடியாத சூழல் மட்டுமின்றி அந்த அணியே தற்போது இல்லை. ஆனால் அவர்கள் ஆதரவு விஷாலின் எதிர் அணிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.