யுவர் ஹானர், ஐ ஆம் பேனர், காமெடி செய்யும் நாரயணசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் போது, அமைச்சராக இருந்து தன் ஏர்போர்ட் பேட்டிகளுக்காக வெகுவாக கலாய்க்கப்பட்ட நாரயணசாமி, புதுச்சேரி முதல்வரான பின்பு ‘சிரிப்பு போலிஸ்’ மோடை ஆஃப் செய்து, இடைநிலை ஆளுனர் கிரண் பேடியுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டார்.

அதன் உச்சக்கட்டமாக, நேற்று முதல் அவர் கவர்னர் மாளிகை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட, அனைத்து டிவிக்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஆனார். ஒரு பக்கம் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு சமீபத்தில் இதே மாதிரி புரட்சி செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்க, அவரது எதிரணியினரோ, அவர் அவ்வளவு வொர்த் எல்லம் இல்லீங்க‌ என்று வடிவேலு ரேஞ்சுக்கு மட்டம் தட்டுகின்றனர்.

என்ன தான் நாரயணாசாமி தலை கீழே நின்னு தண்ணி குடிச்சாலும், இதுக்கெல்லாம் அசருபவரா கிரண் பேடி? தன்னோட போலிஸ் அத்தியாயத்துல ஊருக்குள்ள‌ பெரிய பெரிய ரவுடியை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் ஹேன்டில் செய்த‌ அவர், நாராயணசாமியையும் வழிக்கு கொண்டு வர‌ பல திட்டங்களை வெச்சிருக்காராம். ‘பார்க்க தான போறீங்க, எங்க கிரண் பேடியோட ஆட்டத்தை’னு பாஜக ஆதரவாளர்கள் சொல்றாங்க.

ஏற்கனவே, கிரண் பேடி வேண்டுகோளுக்கிணங்க, மத்திய அரசு துணை ராணுவத்தை புதுச்சேரிக்கு அனுப்பி இருக்கு. சென்னை ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதியில் இருந்து 4 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கவர்னர் மாளிகை, சட்டமன்றம் மற்றும் கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாரயணசாமி, “நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் அறப்போராட்ட வழியில் நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

கவர்னரை முற்றுகையிடுவதோ, அவரை தடுப்பதோ எங்களது நோக்கம் அல்ல. அவர் பயணம் செய்வதற்கு நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. அமைதி வழியில் தான் போராட்டத்தை நடத்துகிறோம்.

கவர்னரால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதுடன் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையும் இருப்பதால் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே உள்ளது. இதற்கு ஒரு தீர்வே ஏற்படவில்லை. கவர்னரின் நடவடிக்கை மாநில வளர்ச்சிக்கு எதிராக இருந்ததால் இதுபற்றி பிரதமர், உள்துறை மந்திரி, நிதி மந்திரி, ஜனாதிபதி என பல தரப்பிலும் புகார் கொடுத்து பார்த்தோம். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கவர்னரின் முட்டுக்கட்டையால் புதுவை அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை,” என்று கூறினார்.