மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி? எக்ஸ்க்ளூசிவ் தகவல்

தனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார்.
இன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது. இதற்கிடையே, ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜினி வாக்களிக்க சென்னை வருவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இதை பற்றி நாம் சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது: “தலைவர் கட்டாயம் சென்னை வந்து ஏப்ரல் 18 அன்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுவார். அவர் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்பார்கள்.”
“ஒவ்வொரு வாக்கின் மதிப்பென்ன என்பது ரஜினி கட்டாயம் அறிவ்வார். அவரின் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களும் ரஜினி சொன்னதை யோசித்து அதன்படி வாக்களிப்பார்கள்,” என்றனர்.
நேற்று நிருபர்களிடம் பேசிய ரஜினி, “பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
நதிகள் இணைந்தால்  நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கும். மக்களின் ஆதரவுடனும், ஆண்டவன் அருளாசியுடனும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும்,” என்றார்.
கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு, “என்னுடைய அரசியல்  நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்,” என ரஜினிகாந்த் கூறினார்.