பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணையில் சிக்கப்போகும் திமிங்கலங்கள்

இது வரை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியது சின்ன மீன்கள் தான். சிபிஐ தற்போது களத்தில் குதித்துள்ள நிலையில், இனிமேல் தான் திமிங்கலங்களும், சுறாக்களும் மாட்டப்போகின்றன என்கின்றன கொங்கு மண்டல வட்டாரங்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தும், 2 தனிக்குழுக்களை அமைத்தும் சிபிஐ தனது விசாரணையை அதிரடியாக‌ தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் தங்கள் விசாரணையை தொடங்கினர். தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இன்று சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இந்தச் சம்பவம் கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று புகார் உள்ளதால், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்னென்ன, இந்தப் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது? என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களின் செல்போன் எண்களின் தொடர்புகள் முகநூல் பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர். இது வரை, சிபிசிஐடி சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் பல்வேறு தடயவியல் ஆதாரங்களை திரட்டியுள்ளார். அதையெல்லாம் சிபிஐ ஆய்வு செய்யவுள்ளது.

அரசியல் புள்ளிகளின் தலையீடு தொடர்பு போன்றவை குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சில முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள் எனத் தகவல்கள் உலா வருகின்றன.