தர்மதுரை வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் புலிப்பாண்டி

தர்மதுரை வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் புலிப்பாண்டி

‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்.கே. சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் பிரமாண்டப் படமாக உருவாகவுள்ள ‘புலிப்பாண்டி ‘படத்தில் நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

அவரிடம் அவரைப் பற்றி வந்துள்ள செய்தி பற்றிக் கேட்டோம். தன்னைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் பற்றித்தானே என்று பேச ஆரம்பித்தார்.

“கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை.. மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள்.

மிகவும் கெஞ்சிக் கேட்டார்கள். அதற்கு அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. நாங்கள் முயன்று தியேட்டர்கள் பிடித்து வெளியிட உதவினோம்.

படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி பணமும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தோம். ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட கணக்குகள் அப்படியே உள்ளன. அவர்கள்தான் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு நானா பொறுப்பு? எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் பேசித் தெளிவு படுத்தி தீர்த்துக் கொள்வதை விட்டு விட்டு ஒரு தயாரிப்பாளர் பற்றி பொதுவில் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கத்தின் நடை முறை சட்டதிட்டங்களுக்கு எதிரான செயல். அது மட்டுமல்ல இது என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும். இது தொடருமானால் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார்.