சாட்டையை சுழட்ட தயராகும் சபாநாயகர், அதிர்ச்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள்

தனது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தகுந்த நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொல்லி வந்த நிலையில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகமும் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, ராஜேந்திரன், 3 எம்எல்ஏக்களுக்கு (கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன்) எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. புதிய ஆதாரங்கள் கிடைத்ததால் தகுதி நீக்க பரிந்துரை செய்துள்ளோம். கட்சிக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டார்கள் என்றார்.

இதற்கிடையே, இந்த விஷயத்தில் தினகரன் அமைதி காக்கும் நிலையில், இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு அரசுக்கு எதிராக செயல்படும் எண்ணமில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால், பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் வகையில், திமுக தலைவர் மு க ஸ்டாலினோ அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால், சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். “மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரை பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. சபாநாயகர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு ‘கொல்லைப்புற வழியாக’ மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கை, அந்த மூன்று உறுப்பினர்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம். ஸ்டாலின் சப்போர்ட்டை நாங்கள் கேடகவுமில்லை, அது எங்களுக்கு வேண்டவும் வேண்டாம் என்கிறார்களாம்.