கொளுத்திப் போட்ட எதிரிகள், கொந்தளித்த ஓபிஎஸ்

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது தான் நடந்திருக்கிறது துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் விஷயத்தில். விசுவாசத்துக்கும் பணிவுக்கும் பெயர் போன பன்னீர்செல்வம் வெகுண்டு எழுந்து விஷமிகளுக்கு பதிலளித்துள்ளார்.

பிரதமர் மோடி வாரணாசியில் நடத்திய கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டதிலிருந்தே அவர் பாஜகவில் சேரப்போவதாக வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்க, அதன் பின்னணியில் இருப்பது எதிரிகள் மட்டுமல்ல, சில துரோகிகளும் தான் என மோப்பம் பிடித்து விட்டாராம் பன்னீர்.

இதைத் தொடர்ந்து அவர், “நான் பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்பது வடிகட்டிய பொய். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன்.

என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் வதந்தி பரப்புகின்றனர்.

அவதூறு பரப்பி என் அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன். அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன், எனக் கூறியுள்ளார்.

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் செய்தியாளா்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுக என்பது தொண்டர்களுடைய இயக்கம். தொண்டர்களுக்கு உரிய மரியாதை, வாய்ப்பு வழங்கப்படும். அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் ஏன் முதலமைச்சராகவும் கூட ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு.

நடந்து முடிந்தநாடாளுமன்ற 38 தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருத்துக் கணிப்பு திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்து வெளியிட்டது. ஆனால் அப்போது கூட அதிமுக தான் வெற்றி பெற்றது அப்போது தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

தேர்தல் ஆணையத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுவார்கள். அதிமுக எப்போதும் பலத்தை நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறது எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் பெருவாரியான வெற்றிகளை நாங்கள் பெறுவோம்,” என்றார்.