கே பாலசந்தரின் 89வது பிறந்த நாள் விழா மற்றும் கவிதாலயாவின் டிஜிட்டல் பயணத்தின் துவக்க விழா

பழம்பெரும் இயக்குனர் கே.பி என்றன்புடன் அழைக்கப்படும் கே.பாலசந்தரின் 89வது பிறந்த நாளை, வெகு விமரிசையான ஒரு நட்சத்திர விழாவாக கவிதாலயா  கொண்டாடியது.  இவ்விழாவிற்கு பெருந்திரளான திரை நட்சத்திரங்களும் ஊடகத்துறையினரும் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

 

இவ்விழா வீணை வித்வான் ராஜேஷ் வைத்யாவின் ‘டூ யூ ஹேவ் அ மினிட்’ எனும் திரையிசை பாடல் துணுக்குகளுடன் இனிதே ஆரம்பமானது.   அவர் கே.பி-யின் திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுத்த 30 பாடல் துணுக்குகளை இசைத்து அனைவரையும் மகிழ்வித்தார்.  இவ்விழாவிற்கு இயக்குனர் இரா. பார்த்திபன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க, சுஹாசினி மணிரத்னம், இயக்குனர் வசந்த், சரண், ஆர் எஸ் பிரசன்னா, விக்னேஷ் சிவன், ஆரவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் கவிதாலயா தங்களது அதிகாரபூர்வ இணையதள முன்னெடுப்பான ‘KavithaalayaaOff’ எனும் யூ-டியூப் சேனலை மகிழ்வோடு துவங்கியது. தங்கள் மேலான பார்வைக்கு அதன் இணையமுகவரி:  https://www.youtube.com/channel/UCFh0pybh9qQzw5iLKFFhqAw

 

கவிதாலயா தங்கள் நிறுவன தயாரிப்புகளான புகழ் பெற்ற தொடர்கள், திரை துளிகள், முற்றிலும் புதிய படைப்புகள் என இனி வரும் காலங்களில் யூடியூப் சேனலில் வெளியிட முடிவு செய்திருக்கிறது. ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மாபெரும் வெற்றி பெற்ற சின்னத்திரைத் தொடரான ‘மர்ம தேசம்’ யூடியூப் சேனலில் வெளியான நிலையில், கவிதாலயாவின் ரசிகர்களை அது தன்னகத்தே ஈர்த்து வருகிறது.

 

இந்நிறுவனம் குறிப்பாக OTT தளத்திற்கெனவே வேறுபட்ட வகைகளை சார்ந்த, வித்தியாசமான நான்கு படைப்புகளை உருவாக்கி வருகிறது.

 

முதல் படைப்பாக, இயக்குனர் சரண் இயக்கத்தில் ’76 கட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள படைப்பு. கே.பி தனது படைப்பான ‘மன்மத லீலை’ திரைப்படத்தை வெளியிட சந்தித்த சோதனைகளையும், சவால்களையும் சுவராஸ்யமாக படம்பிடித்து காட்டவிருக்கிறது. 

   

அடுத்ததாக, இயக்குனர் வி பிரியா இயக்கத்தில், ‘ஆசை முகம் மறந்து போச்சே’ எனும் தொடர். பெண்களை மையமாக வைத்து வெளிவரவிருக்கும் இத்தொடர், நான்கு தலைமுறை பெண்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்து காட்டும்.

 

மூன்றாவதாக, ‘மான்கள் ஜாக்கிரதை’ என்ற சமூக-அரசியல் தொடர், ஆர்எஸ் பிரசன்னாவுடன் இணைந்து, பிரவீன் ரகுபதி இயக்கத்தில் இத்தொடர் தயாராகி வருகிறது.

 

நான்காவதாக, ‘பிகைண்ட் உட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘யுவர்ஸ் ஷேம்ஃபுல்லி 3’ எனும் தொடர், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது.

 

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிகைண்ட் உட்ஸ்’ உடன் இணைந்து ‘கவிதாலயா’ ஒரு குறும்பட போட்டி நடத்தவிருக்கிறது.  இதில் வெற்றி பெறுபவருக்கு கவிதாலயா பேனரில் ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இறுதியாக, கே.பி ஒவ்வொருவரது வாழ்விலும் ஏற்படுத்திய ஏற்றங்களை, மாற்றங்களை, அவர் இன்றும் அவரது ரசிகர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் எவ்வாறு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்பதையும் பகிர்ந்து கொண்ட ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக நிறைவு பெற்றது.