காடுவெட்டி குருவாக உருவாக நினைக்கும் வேல்முருகன், கொம்பு சீவி விடும் திமுக‌

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒரு காலத்தில் பாமகவில் இருந்தவர். அங்கிருந்த பிரிந்து வந்து தமிழ் போராளியாக தன்னை அடையாளம் காட்ட முயற்சித்து வந்தவரை சமீபத்தில் அழைத்த திமுக தலைமை அவரை திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், பாமகவுக்கு எதிராகவும் கொம்பு சீவி விட்டுள்ளதாம்.

‘காடுவெட்டி குரு மறைந்த நிலையில், நீங்கள் தான் அவரின் இடத்தை நிரப்ப பொருத்தமானவர். வன்னியர்களின் தனிப்பெரும் தலைவராக நீங்கள் உருவாக வேண்டும். அதற்கு எங்கள் ஃபுல்ல் சப்போர்ட் உண்டு’ என சொல்லப்பட்டதாம். அதை தொடர்ந்து தான் ராமதாசுக்கு எதிராக வேகவேகமாக வாள் சுழற்றி வருகிறாராம்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், வன்னியர் அறக்கட்டளை சொத்துக்கள் எங்கே? என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு கேள்வி எழுப்பினார். “வன்னியர் சங்கத்தினால் கட்டப்படுகின்ற அனைத்து கட்டிடங்களும், கல்லூரிகளும் உலகம் முழுவதும் வாழுகின்ற வன்னியர்களுக்கு சொந்தமானது என்று சொல்லித்தான் ஊர் ஊராக தெருத்தெருவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராமதாஸ்.

இதையடுத்து அறக்கட்டளைக்காக வன்னியர் சமூகத்தில் இருக்கின்ற செல்வந்தர்களிடம் வசூல் செய்தோம். அண்டா, குண்டா, தாலி, மெட்டி எல்லாம் அடகு வைத்து வெளியாட்டில் சென்று ஒட்டகம் மேய்த்து, கட்டட வேலை செய்து சம்பாத்த பணத்தில் பல இளைஞர்கள் அறக்கட்டளைக்காக உதவினார்கள். சாதாராண கூலித்தொழிலாளிகளும், விவசயிகளூம் கொடுத்த உதவியில்தான் கட்டப்பட்டது வன்னியர் அறக்கட்டளை.

டாக்டர் ராமதாஸ் வன்னிய சமூக மக்களின் ரத்தத்தை உறிஞ்சி அந்த ரத்தத்தில் உள்ள அணுக்களை கூட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி அவரும் அவரது குடும்பமும் இன்று இந்தியாவிலேயே மிகவும் செல்வந்தர் குடும்பமாக வாழ்கிறார்கள். இந்தியாவிற்கே செல்வந்தர்களாக இருந்த வன்னிய மக்கள் ஓட்டாண்டிகளாக நடுத்தெருவில் நிற்கின்றனர்,” என்றார் வேல்முருகன்.

மேலும் அவர், “ராமதாசுக்கு சொந்தமாக அன்று ஒரு ஏக்கர் கூட இல்லை. மாமியார் வீட்டில் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே சொந்தக்காரராக இருந்தார். இப்போது பல்லாயிரக்கணக்கான ஏக்கருக்கு ராமதாஸ் சொந்தக்காரர் ஆனது எப்படி? தைலாபுரத்தில் இருந்து ஏற்காடு, சென்னை திண்டிவனம் வரையிலும் பல்லாயிரம் ஏக்கர் சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார்,” என்று குற்றம் சாட்டினார்.

அது மட்டும் இல்லாமல், ஒரு பகீர் குற்றச்சாட்டையும் வைத்தார். “40 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்வதை மோடி, எடப்பாடி அரசு தடுக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது. தேர்தலுக்கு பிறகு நீதிமன்றத்தை நாட உள்ளேன்,” என்று சொன்னார் வேல்முருகன்.