இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்: தில்லாக சொல்லும் நித்யா மேனன்

கடந்த சில நாட்களாக நடிகை நித்யா மேனனை வைத்து மலையாளப் பட உலகில் ஒரு விஷயம் பற்றி எரிகிறது. அதாவது, மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் அவரை சந்திக்க சென்றதாகவும், அவர்களை அவர் சந்திக்க மறுத்ததோடு மட்டுமில்லாமல், அவமதித்தாகவும், இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் யோசிப்பதாகவும் தகவல்கள் பரவின.

இதப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். “இந்த சம்பவம் நடைபெற்ற போது தான் எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்து இருந்தது.

அப்போது அவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டிஇருந்தது. படப்பிடிப்பின்போதே நான் கேரவனுக்குள் நுழைந்து தாயை நினைத்து அழுதேன். அழுது அழுது ஒற்றைத் தலைவலியாலும் பாதிக்கப்பட்டேன்.

அந்த சமயத்தில் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை. தயாரிப்பாளர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ பயப்படுவதோ இல்லை. பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று கூறினார்.

மேலும் அவர், “முன் அனுமதி பெறாமல் சில தயாரிப்பாளர்கள் குழுவாக என்னை தள்சமயம் ஒரு பெண் குட்டி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சந்திக்க வந்தனர். அவர்களை நான் சந்திக்க மறுத்ததால் அவர்கள் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர்.” என்று கூறினார்.

“எனக்கு உடல்நலம் சரியில்லாததாலும், படப்பிடிப்பு இருந்ததாலும் பின்னர் பேசலாம் என்று அந்த தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன். இது அவர்களின் ஈகோவை தொட்டுவிட்டது. நான் அவர்களுடன் பேசாததால் நான் திமிர் பிடித்தவள் என்று அந்த தயாரிப்பாளர்கள் வெளியே சொல்லிவிட்டனர்.

எனக்கு இல்லை அவர்களுக்கு தான் ஈகோ பிரச்சனை. அந்த சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு. அதன் பிறகு இதற்கெல்லாம் கவலை பட்டால் வேலைக்கு ஆகாது என்று படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டேன்,” என்றும் கூறியுள்ளார் நித்யா.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நித்யா மேனன். தமிழில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.