அமமுகவும் நான் தான், அதிமுகவும் நான் தான்: டிடிவியின் டிவிஸ்ட், ஷாக்கில் சசிகலா விசுவாசிகள்

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில், தேர்தல் முடிந்த அடுத்த தினமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக முடி சூட்டிக் கொண்டார் இதுவரை அந்த அமைப்பின் துணை பொதுச்செயலாளராக இருந்த‌ டிடிவி தினகரன். அது மட்டுமல்லாது, அதிமுகவை கைப்பற்றும் சட்டப் போராட்டமும் தொடரும் என அறிவித்துள்ளார்.

இதெல்லாம் ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என அமமுகவில் உள்ள ‘சின்னம்மாவின்’ விசுவாசிகள் குழப்பத்தில் இருக்க, சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் அமமுகவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவரது ஆலோசனையின் படி தான் நான் அமமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என தினகரன் அதிரடி கிளப்பியுள்ளார்.

டிடிவியின் இந்த நடவடிக்கைகளால் சில அமமுக முக்கியஸ்தர்கள் அதிமுகவுக்கோ அல்லது திமுகவுக்கோ தாவுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாத தினகரன், அதிமுகவை மீட்கும் சட்டப் போராட்டமும் தொடரும் எனக் கூறியுள்ளார்.

அதோடு நிற்காமல், ஆளும் கட்சியை மேலும் உசுப்பும் வகையில், “அதிமுகவில் 95 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அதிமுக கட்சியே காணாமல் போகப்போகிறது. அமைச்சர்கள் அழுகிற காலம் வரப்போகிறது,” எனக் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக தினகரன் நேற்று சென்னை அசோக்நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார். எதிர்காலத்தில் அதிமுகவை அமமுகவுடன் சேர்த்து விடுவோம்; மதுரை ஆதினம் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

“சசிகலா அதிமுகவை கைப்பற்றுவதற்காக மறு பரிசீலனை மனுதாக்கல் செய்ய உள்ளார். எனவே அவரால் இந்த கட்சியை தொடங்க முடியாது. எனவே நான் கட்சியை தொடங்கியுள்ளேன்.
சசிகலா தேவைப்பட்டால் இங்கு வரலாம். எனவே தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம்,” எனவும் அவர் கூறினார்.